

இவ்வாறு சென்னை மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட ஆட்டோக்களில் சில வில்லங்கங்களும் இருப்பதை மறுத்தற்கியலாது. மாநிலத்தில் பல இடங்களில் நடைபெறும் சிறிய விபத்திலிருந்து மிகப்பெரிய விபத்துக்கள் வரை அனைத்திற்கும் அநேகமாக இந்த ஆட்டோக்கள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஆட்டோ ஓட்டுநர்களின் அனுபவமின்மையே இதற்கு காரணம். சில ஆயிரங்களைக் கொடுத்து லைசென்சை மிக எளிதாக பெறுவதில் தொடங்கி லைசென்சே இல்லாமல் ஓட்டுவது வரை ஆட்டோக்களைக் கையாள்பவர்கள் சிலபல செப்படி வித்தைகளைக் கையாள்கிறார்கள்.

தினப்படிக்காக ஆட்டோ ஓட்டுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம். பணம் அதிகம் உள்ள ஒருவர் அதிகப்படியான ஆட்டோக்களை வாங்கி தினப்படிக்காக ஆட்டோ ஓட்டுநர்களிடம் கொடுப்பது என்பது நடைமுறையில் உள்ளது. இவர்களிடமிருந்து ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை தருவதாகச் சொல்லி, ஆட்டோக்களை வாங்கி ஓட்டுபவர்களில் சிலருக்கு முறையான லைசென்ஸ் இருக்காது. தினப்படிக்காக விடுபவருக்கு அவருக்கான பணம் முறையாக வந்துவிட்டால் போதும். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்பது அவருக்கு அவசியமில்லை. மீறி எங்காவது ஆட்டோ பிடிபட்டால் அங்கு பணம் விளையாட ஆரம்பித்துவிடும். அல்லது அரசியல்வாதிகளின் கைகள் தன்னுடைய வேலையை காட்டும். அரசியல்வாதிகளுக்கு இதனால் கிடைக்கக்கூடிய லாபம் அவர்களுடைய கட்சி பேரணிகளுக்கு ஆட்டோக்கள் இலவசமாக கிடைக்கும் என்பதே.
தற்பொழுது Free permit என்ற பெயரில் விதவைகளுக்கும் ஏழைப் பெண்களுக்கும் ஆட்டோவிற்கான உரிமம் வழங்கப்படுகிறது. இதை வைத்து ஆட்டோக்களை வாங்கும் அவர்கள் அதை தினப்படிக்காக விடுகிறார்கள். இதிலும் பல முறைகேடுகள் நடந்தவண்ணம் உள்ளது.

private auto என்ற வகையில் நகரில் ஓட்டப்படும் ஆட்டோக்களில் அதிகப்படியான தில்லுமுல்லுகள் நடைபெறுகின்றன. கடத்தல் வேலைகளிலிருந்து பாலியல் முறைகேடுகள் வரை இந்த ஆட்டோக்களில் நடைபெறாத அட்டூழியங்களே இல்லை. இதுமாதிரியான ஆட்டோக்களில் நம்பர் பிளேட்டே இருக்காது.. மீட்டரும் இருக்காது.. இதையெல்லாம் யாராவது சுட்டிக்காட்டினால் ‘உட்காருங்க நான் பார்த்துக்கிறேன்’ என்பதே ஆட்டோ ஓட்டுநர்களின் பதிலாக இருக்கும்.

காலை நேர பரபரப்புகளுக்கிடையில் சிறிய சிறிய சந்துகளிலெல்லாம் விர்... விர்... என்று புகுந்து எந்த எலிப்பொறிக்குள்ளேயும் நுழைந்து வெளியில் வந்து விடுகிறார்கள் இந்த ஆட்டோக்களை ஓட்டுபவர்கள். போக்குவரத்து காவலர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தங்களுடைய பயணங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர் இவர்கள். அதையும் மீறி காவலர் கையில் சிக்கிக் கொண்டால் இருக்கவே இருக்கிறது பணம், செல்வாக்கு. சில சமயம் ஆட்டோவில் சவாரி செய்பவர்களை தங்கள் சொந்தக்காரர்கள் என்றும் கூறித் தப்பிவிடுகிறார்கள். இவர்களுடைய தில்லுமுல்லுக்கு ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களையும் உடந்தையாக்கி விடுகிறார்கள். மொத்தத்தில் இவர்களின் கைகளில் ஊசலாடிக்கொண்டிருப்பது இப்படியெல்லாம் நடக்கிறது என்பது தெரியாமலேயே இவர்களுடன் சகஜமாக சென்று வரும் சாதாரண மக்களின் உயிர்தான்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இதுமாதிரியான ஆட்டோக்களை பறிமுதல் செய்தது ஆட்சி நிர்வாகம். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 2500 ஆட்டோக்களை திருப்பி பெறுவதற்காக யாருமே வரவில்லை என்பதே அதிர்ச்சிக்குரிய விஷயம். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஆட்டோக்களும் எடைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அப்போதைய காவல்துறை ஆணையர் அனைத்து ஆட்டோக்களையும் பரிசோதனை செய்து - நல்லமுறையில் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடியில் ‘on behalf of your safety…’ (பொதுமக்களின் சேவையை கருத்தில் கொண்டு) என்று பொருள்படும்படியான வாசகங்களை தாங்கிய ஸ்டிக்கரை அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டச் செய்தார்.

இப்பொழுது பெருகிவரும் இன்னொரு முக்கியமான பிரச்சினை நகரில் பல்வேறு இடங்களிலும் இண்டு இடுக்குகளிலும் காணப்படும் ஆட்டோ ஸ்டாண்டுகள். ஒரு பத்து ஆட்டோக்கள் சேர்ந்து விட்டால் அந்த இடத்தில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு அமைந்துவிடும். இதற்கான முறையான அனுமதி பலநேரங்களில் பெறப்படுவதில்லை. அக்கம்பக்கத்தவர்களைப் பற்றிய கவலை இவர்களுக்கு இல்லை. அந்த இடத்திலேயே வரிசையாக ஆட்டோக்களை நிறுத்தி வைத்துவிட்டு இவர்கள் செய்துவரும் இடைஞ்சல்கள் சொல்லி மாளாது. நாளெல்லாம் அந்த இடத்திலேயே இருந்தாலும் இருப்பார்கள். ஆனால் வரும் வாடிக்கையாளர்களிடம் ஒரு ஐந்து ரூபாயைக் கூட விட்டுக் கொடுப்பதற்கு மனமிருக்காது இவர்களுக்கு. அதிலும் அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஏதாவது ஒரு சினிமா பிரபலத்தின் அல்லது அரசியல்வாதியின் பெயரை சூட்டி விட்டால் எந்த பிரச்சினையையும் சமாளித்துவிடலாம்.

இது இப்படியிருக்க, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்கின்ற ஆட்டோக்களின் நிலை வரம்பு மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு ஆட்டோவில் மூன்றிலிருந்து நான்கு குழந்தைகள் வரை ஏற்றிக் கொண்டு போகலாம் என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அதை பின்பற்றுவதற்கு யாரும் தயாராக இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அதையும் உடனடியாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வெறியாக மாறிக் கொண்டிருக்கும் கொள்கைக்கு அப்பாவி குழந்தைகளின் உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு சமீபத்தில் பல உதாரணங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளது. செல்போன் பேசியபடி ஓட்டும் ஆட்டோ ஓட்டுநரின் செயலுக்கு பிஞ்சு உயிர்கள் தொடர்ந்து பலியாகின்றன. நம் கண்முன்னால் அவை நடந்தும் அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்யமுடியாத நிலையில் நாம் இருக்கிறோம்.

சில குழந்தைகளின் உயிர்களை பலி கொடுத்ததன் எதிரொலியாக அரசு இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. பள்ளிகளிலும் ஆட்டோ ஓட்டுநர்களின் உரிமம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி கேட்கப்பட்டன. இதெல்லாம் சிறிது காலத்திற்குத்தான். அதையடுத்து அடுத்த பிரச்சினை பூதாகாரம் எடுத்தபின்பு இந்த விஷயம் அப்படியே அமுங்கிவிட்டது. பெற்றோர்களுக்கும் வேறு கவலைகள்.. அவர்களும் மறந்து விட்டார்கள்.. எதுவுமே தன்னுடைய வீட்டுக்கதவை தட்டும்பொழுதே இவர்களுக்கு அதிகமாக உறைக்கும். அடுத்தவர் வீட்டில் எது நடந்தாலும் அது தன்னை பாதிக்காதவரை அதைப் பற்றிய கவலை இவர்களுக்கு சிறிதளவும் இருக்காது.

கடந்த ஆகஸ்டு 12ம் தேதி மும்பை மற்றும் பெங்களூரு பகுதிகளில் ஆட்டோக்களை எதிர்த்து பொதுமக்களால் ‘மீட்டர் ஜாம்’ என்ற போராட்டம் அறிவிக்கப்பட்டது. குறைந்த தூரங்களுக்கு வருவதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் மறுப்பது மற்றும் அதிகபட்சமான பணம் கேட்பது போன்றவற்றை முன்னிறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இணையதளங்களிலும் இதுகுறித்த செய்திகள் ‘ஆர்க்குட்’ போன்ற வலைதளங்களின் வாயிலாக அனைவருக்கும் பரப்பப்பட்டது. அன்றைய தினம் அப்பகுதி மக்கள் ஆட்டோக்களை புறக்கணித்தனர். இந்த போராட்டம் போதிய அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும் இதைப் போன்ற போராட்டங்கள் தொடர்ந்தால் மட்டுமே நல்ல தீர்வைக் காண முடியும் என்பது இதில் ஈடுபட்டவர்களின் நம்பிக்கையாக இருந்ததைக் காண முடிந்தது.

நல்ல ஆட்டோக்கள் என்றால் நாம் மூன்று விஷயங்களை கவனிக்கலாம். முதலில் நம் கண்ணை உறுத்தும் அதே சமயத்தில் உடலை உறுத்தாத வண்ணம். மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் ஆட்டோக்களே முறையாக பர்மிட் வாங்கியிருக்கும். இரண்டாவதாக நம்பர் பிளேட். அது இல்லாத ஆட்டோக்களைக் கண்டால் நாம் ஓடிவிடுவது நல்லது. இல்லையென்றால் அது நம்மை எங்காவது ஓட்டிவிடும். மூன்றாவது மீட்டர். அது சூடு மீட்டராகவே இருந்தாலும் மீட்டர் என்பது மிகவும் அவசியம்.

சில ஆட்டோக்களில் சூடு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் அதுவும் சிறிது காலத்திலேயே ஆறிவிட்டது. தற்பொழுது சில ஆட்டோக்களில் கேஸ் பயன்படுத்தப்படுகிறது. அதைப் பார்த்தாலும் நமக்கு பகீர் என்கிறது. புவி வெப்பமாதல் அதிகமாகியிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த சூழல்களில் கேஸ் ஆட்டோக்களால் நம்முடைய உயிருக்கு உத்தரவாதத்தை அளிக்க முடியாது. எந்தநேரத்தில் சிலிண்டர் வெடித்து தீப்பிடிக்குமோ என்ற அச்சத்தோடே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. வெளியில் சென்று வீட்டிற்கு ஒழுங்காக வருவது என்பதே தினமும் நாம் சந்திக்கும் சவால்தான். நிலைமை இப்படியிருக்க இத்தகைய கேஸ் ஆட்டோக்கள் சகஜமாக நம்மைச் சுற்றி, நம்மை ஏற்றிக் கொண்டு களைகட்டிக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் இந்த ஆட்டோக்களையாவது அரசு தடை செய்ய வேண்டும்.

புறநகர் பகுதிகளில் அதிகமாக ஓட்டப்பட்டுவரும் ஷேர் ஆட்டோக்களின் நிலையை பற்றி கூறவேண்டிய அவசியமே இல்லை. இந்த ஆட்டோக்களினால்தான் அதிகமான விபத்துக்கள் நேர்கின்றன. ஒரு ஆட்டோவில் குறைந்தபட்சம் ஏழிலிருந்து எட்டுபேர் வரை ஏற்றிக் கொள்கிறார்கள். ரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்பொழுது அதிகமான விபத்துக்களை இத்தகைய ஆட்டோக்கள் சந்திக்கும் செய்திகளை நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் காணமுடியும்.
இத்தகைய நடைமுறை சிக்கல்கள் ஒருபுறமிருக்க ஆட்டோ ஓட்டுனர்களில் சிலர் திருட்டு போன்ற தொழில்களிலும் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த வருடங்களில் செங்குன்றத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய ஆட்டோவில் ஏறும் பெண் பயணிகளிடம் பாலியல் வன்முறை புரிந்திருக்கிறார். மனதளவில் புண்பட்டிருக்கும் அவர்களிடம் நகை, பணம், செல்போன் போன்ற பொருட்களையும் அவர் அபகரித்திருக்கிறார். இத்தகைய வன்முறைக்கு ஆளான பெண்கள் யாரும் வழக்கம்போல காவல்துறையின் உதவியை நாடவில்லை. அதே நபர் ஆண் பயணிகளிடமும் அவர்கள் வைத்திருந்த பணம் பொருட்களை அபகரித்திருக்கிறார். அதிலொருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இவருடைய குற்றங்கள் அம்பலமாகியிருக்கின்றன.

நகரில் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக இருக்கும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மும்பையில் நகரின் உட்பகுதிகளில் ஆட்டோ ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல சென்னையிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கையை சென்னையிலும் அமல்படுத்த அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் நகரின் முக்கிய பிரச்சினையான போக்குவரத்து ஒழுங்குப்படும். இது அமல்படுத்தும்போது ஆட்டோக்களையே நம்பியிருக்கும் மக்களும் அதற்கு மாற்று ஏற்பாடுகளை நாடுவார்கள்.